அருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
உழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்கபடாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். சமீபமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனங்களை அள்ளியிருக்கும் அருண் விஜய், 2020 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “மாஃபியா” படம் 2020 பிப்ரவரி 21 ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கும் “அக்னி சிறகுகள்” படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் காவல் அதிகாரியாக அவர் நடிக்கும் “சினம்” படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.
இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது...
இந்த 2020 ஆம் வருடம் நிறைய நேர்மறை அம்சங்களை வாழ்வில் கொண்டுவந்துள்ளது. ரசிகர்களின் அன்பும் ,பேராதரவும் மட்டுமல்லாமல் எனது வரப்போகும் படங்களின் மீது அவர்கள் காட்டும் பேரார்வம் என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது. அவர்களின் அன்பு இன்னும் கடுமையாக உழைக்க எனக்கு பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. “சினம்” திரைப்படம் திரில்லர் ஆக்ஷன் விரும்பிகளுக்கு பெரு விருந்தாக இருக்கும் அதே நேரம் உணர்வுப்பூர்வமாக கவரும்படி இருக்கும். கதை சொல்லும் விதத்திலும் கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் இயக்குநர் குமரவேலன் வித்தகராக இருக்கிறார். மேலும் படப்பிடிப்பில் அவரது தொலைநோக்கு தன்மை பெரும் சிக்கல்களையும் எளிதாக தீர்த்துவிடுகிறது. ரசிகர்களை மனதில் வைத்து மிக அருமையாக படத்தை இயக்கி வருகிறார். மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். டீஸர், இசை வெளியீடு, திரை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.