வாங்க சார்... என்ன கூல்டிரிங்ஸ் வேணும்... குரல் "எம்பிஏ" பட்டதாரி வாங்க சார்... புது ஸ்வீட், காரம் இருக்கு... குரல் "பிஏ" பட்டதாரி...

Sekar Tamil
தஞ்சாவூர்:
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப்புகினும்
கற்கை நன்றே" என்ற ஒளவையாரின் கூற்று இந்த காலம் அல்ல எந்தக்காலத்திற்கும் சரியான ஒன்று. அதுவும்... மிகச் சரியாக பொருந்தக்கூடிய ஒன்றாகும் என்று சொல்வதால் மிகையில்லை.


இதன் அர்த்தம் படிப்புக்காக பிச்சை எடுத்தாலும் நல்லதுதான்... ஏனென்றால் படிப்பு என்பது அத்தகைய உயர்வான ஒன்று என்பது அர்த்தம். இது இக்கால இளைஞர்கள் மத்தியில் பலருக்கு தெரிகிறதோ இல்லையோ... ஆனால் சிலர் அதை நன்றாகவே உணர்ந்துள்ளனர். அந்த உணர்ந்த படிப்பின் "சக்தி" அவர்களுக்கு உந்துதலாக உள்ளது.


 இதை நிரூபிக்கும் 2 இளைஞர்களை பற்றி பார்ப்போம். தஞ்சை நகர் வந்தாரை வாழ வைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடே கிடையாது. ஆனால் படித்தவர்களுக்கும் கைக் கொடுக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கால இளைஞர்களுக்க பள்ளி, கல்லூரி செல்வது என்பது நாகரீகமான ஒன்று போலவும், சுற்றுலாத்தலம் போலவும் ஆகிவிட்டது.  


இதில் இந்த 2 இளைஞர்கள் படிப்பிற்காக தங்களை வருத்திக் கொள்கின்னறனர். ஆம். உயர்வென்ற ஒன்றை கருத்தில் கொண்டு உழைக்க நாங்கள் ரெடி... வாய்ப்பு தர நீங்கள் தயார் என்றால் என் குருதியின் கடைசி சொட்டு வரை நாங்கள் படிக்க ரெடி என்று படிப்பை கருத்தில் கொண்டு பார்ட் டைம் பணியாற்றுகின்றனர் இரு இளைஞர்கள்.


 வாங்க... வாங்க... என் ஜீஸ் வேண்டும்... காரம், ஸ்வீட் புதுசு சார்... வாங்க வந்து வாங்கிட்டு போங்க... அனைத்து பஸ்ஸ்டாண்டுகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் இது கேட்ட, கேட்கும் குரலாக இருக்கலாம். அதேபோல்தான் இந்த குரலையும் கடந்து சென்றிருப்போம். கடந்து சென்று கொண்டிருப்போம்.


 தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட்டிலும் இந்த குரல் கேட்டது. கடந்து செல்ல முயன்ற கால்கள் தயங்கி நின்றது. காரணம் குரலில் இருந்த ஈர்ப்பு அல்ல. கூப்பிட்ட இளைஞரின் கரங்களில் இருந்த புத்தகம். கண்கள் கேள்விக்குறியை எழுப்ப, புருவங்கள் ஆச்சரியத்தில் உயர மெதுவாக அந்த இளைஞரிடம் பேச்சு கொடுத்தோம். அந்த இளைஞர் பெயர் மைக்கேல் ராஜ். எம்பிஏ., மாணவர். நம்பிக்கையான குரலுடன் சொல்ல ஆரம்பித்தார்.


 தந்தை காலமாகிவிட்டார். தாய் வள்ளியம்மாள் அதே புதிய பஸ்ஸ்டாண்டில் பூக்கடையில் வேலை பார்க்கிறார். கூட பிறந்தவர்கள் 5 பேர். இதில் அம்மாவின் சம்பளமும், அண்ணனின் சம்பளமும் குடும்பத்தை காப்பாற்ற... மைக்கேல் ராஜ் தன் படிப்பிற்காக பார்ட்டைம் ஆக கூல்ட்ரிங்க்ஸ் கடையில் வேலை பார்க்கிறார். 


கல்லூரிக்கு காலை செல்பவர் அங்கிருந்து நேராக கடை வேலைக்கு வருகிறார். இரவுப்பணி வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறார். கிடைக்கும் நேரத்தில் தூக்கம். காலையில் கடையிலிருந்து புறப்படுபவர் அங்கிருந்து நேராக வீடு குளியல், சாப்பாடு முடிந்து காலேஜீக்கு பறக்கிறார்.


இதுதான் இவரது ரெகுலரான வேலை. இந்த சம்பளம் படிப்புக்கு உதவுகிறது. தன் உழைப்பு... தன் படிப்பு என்று இருந்தாலும்... படிப்பு செலவிற்கு போனது போக மீதித் தொகையை குடும்பத்திற்கு அளிக்கிறார். பாராட்டினோம்... மனதார பாராட்டினோம்.


 அடுத்தவர் அருகில் உள்ள ஸ்வீட் ஸ்டாலில் வேலை பார்க்கும் சிவப்பிரகாசம் சுருக்கமாக சிவாஜி. தந்தை குடும்பத்தை கவனிக்காத நிலை. தாய் தெய்வநாயகி கூலித் தொழிலாளி. கூட பிறந்தவர்கள் 3 பேர். பி.ஏ. பட்டதாரி.


குடும்பத்திற்காக ஸ்வீட் ஸ்டாலில் ஏறியவர் தற்போது பார்ட் டைமில் எம்.ஏ. படிக்க உள்ளார். இவரது சம்பளமும், தாயாரின் சம்பளமும்தான் குடும்பத்திற்கு உதவுகிறது. இருந்தாலும் மேற்கொண்டு படிக்க வேண்டும்.


மேலும்... மேலும் உயர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருவரும் உள்ளனர். படிக்க எப்படி உங்க 2 பேருக்கும் நேரம் கிடைக்கிறது என்றால்... கிடைக்கும் நேரத்தில் கவனத்தை சிதற விடாமல் படித்தாலே போதும் அண்ணே... நல்ல மதிப்பெண் எடுத்து விடலாம். 


படிப்புதான் நிரந்தர சொத்து. நம்பிக்கை இருக்கிறது. மேலும் மேலும் உயர்வோம் என்கின்றனர். வேலையிடத்தில் உள்ள தொந்தரவுகளையும் தாண்டி படிப்பு என்ற உயர்வான தங்கத்தை அடைய போராடும் இவர்களுக்கு நாமும் சொல்வோம் பாராட்டுக்களை.
நம்மிடம் பேசிக் கொண்டிருந்தாலும் வாடிக்கையாளர்களையும் கவனித்துக் கொண்டு புத்தகம் பக்கமும் பார்வை திருப்பி வண்ணம் இருந்தனர். மேலும் வளருங்கள்... வானத்தையே எட்டி பிடித்து விடலாம்.


Find Out More:

Related Articles: