உச்சநீதிமன்ற உத்தரவு... கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல்

Sekar Tamil
கர்நாடகா:
காவிரி நீர் விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதால் அங்கு வாழும் தமிழர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


 தமிழகத்திற்கு காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தை எரிப்பது, அவரது உருவ பொம்மையை பாடையில் ஊர்வலமாக எடுத்து வருவது, தமிழக பஸ்களை கொளுத்துவது என்று அவர்களின் அட்டூழியம் எல்லை மீறி போய் கொண்டுள்ளது. 


இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் இன்றும் அதிரடி தீர்ப்பளிக்க அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதனால் முன் எச்சரிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


 கர்நாடகாவில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இதுவரை தமிழகத்தை சேர்ந்த 12 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பயணிக்கும் கார்களும் தாக்கப்படுகிறது. 


 பெங்களூரில், மென்பொருள் நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அவசர, அவசரமாக வீட்டுக்கு திரும்புகின்றனர். ஆனால் அவர்களின் வாகனங்களை அடையாளம் கண்டு தாக்கப்படலாம் என்பதால் அலுவலகங்களிலேயே விட்டுச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். 


ஒரே நேரத்தில் வீடு திரும்புவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர். 


 தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை மட்டும் அவர் கண்டுகொள்வதில்லை என்று தமிழகத்தில் உள்ளவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Find Out More:

Related Articles: