ரூ.75 கோடி மோசடி... பாரிவேந்தர் கைது? சென்னை போலீஸ் அதிரடி

Sekar Tamil
சென்னை:
அதிரடி... அதிரடி என்பது போல் ரூ. 75 கோடி மோசடி செய்ததாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் பாரிவேந்தரை இன்று போலீசார் கைது செய்துள்ளதாக விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பாரிவேந்தரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.


எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தரும், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனருமான பாரிவேந்தர் மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்காக சுமார் 110 பேரிடம் ரூ. 75 கோடி ரூபாய் பெற்றுகொண்டு மோசடி செய்ததாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.


இதையடுத்து வழக்குப்பதிவு செய்துவந்த போலீசார் நேற்று மாலை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு பாரிவேந்தரை வரவழைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவ... பத்திரிகை நிருபர்கள், மீடியாவினர் என குவிந்து விட்டனர். இதனால் கமிஷனர் அலுவலகமே பரபரப்புக்கு உள்ளானது. 


ஏற்கனவே பாரிவேந்தரின் வலது கரம் போல் செயல்பட்டு வந்த மதன் பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு சீட் பெற்றுத்தரவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் மாயமானார். அப்போது அவர் மீது பாரிவேந்தர் பணமோசடி வழக்கை போலீசில் பதிவு செய்திருந்தார். ஆனால் பாரிவேந்தரிடம்தான் அனைத்து பணமும் கொடுத்ததாக மதன் கூறியிருந்ததாக பலரும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சென்னை போலீசார் பாரிவேந்தரை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்பட ஜாமீனில் வெளிவர இயலாத 3 கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இன்று மதியம் பாரிவேந்தரை கோர்ட்டில் ஆஜர்படுத்த தீர்மானித்துள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது சம்பவம் அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படும் என்றும் சொல்கின்றனர். இவர் கைதானது உண்மை என்றால் இவரது கட்சியினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.


Find Out More:

Related Articles: