புதுடில்லி:
முறைகேடு... முறைகேடு... தனியார் நிறுவன அதிகாரிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டதுதான் தற்போதைய பரபரப்பு. என்ன விஷயம் தெரியுங்களா?
சத்தீஸ்கர் மாநிலத்தில் முறைகேடான வகையில் நிலக்கரி வெட்டி எடுக்கும் உரிமம் பெற்றதாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 அதிகாரிகளையும் குற்றவாளிகள் என்று அறிவித்தது சிபிஐ நீதிமன்றம். அதுமட்டுமா? அவர்களை உடன் கைது செய்து சிறையில் அடைக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக பதிவான வழக்குகள் 19 என்பது குறிப்பிடத்தக்கது. டில்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இஸ்பத் நிறுவன இயக்குனர்கள் ருங்தா சகோதரர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் இஸ்பத் நிறுவனத்துக்கு தனியாக ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியிருந்தது.
இதுதான் இந்த வழக்குகளில் கொடுக்கப்பட்ட முதல் தீர்ப்பும், தண்டனையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரதி ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் மேலும் இதேபோல் வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் ரதி, தலைமை செயல் அதிகாரி உதித் ரதி, உதவி பொது மேலாளர் குஷால் அகர்வால் ஆகியோரை குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி பாரத் பிரசார், கோர்ட்டில் ஆஜராகி இருந்த அவர்கள் 3 பேரையும் உடன் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த அதிரடி உத்தரவுதான் பரபரப்பை கிளப்பியது.