நுணுக்கம், அற்புத வேலைப்பாடு, சுத்தமான வெள்ளி... தஞ்சையின் புகழ்கொடியில் இன்னொரு வைரம் கலைத்தட்டுகள்.

Sekar Tamil
தஞ்சாவூர்:
கல், பாறை, நெட்டி, மண், வெள்ளி, தங்கம், பித்தளை காணும் பொருட்களில் எல்லாம் கலையை கொண்டு வந்த மண்... தஞ்சை மண்... கலைகளின் பிறப்பிடமும், கலைகளை வளர்த்த பெருமையும தஞ்சைக்கே உரித்தானது. உயிருடன் எழுந்த சிற்பமோ என்று எண்ணத்தோன்றும் வகையில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் தஞ்சைக்கு மற்றொரு சிறப்பு தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள்.


சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள், பிறந்தநாள் கொண்டுபவர்கள் என அனைவரும் பரிசு கொடுக்க முதலில் தேர்வு செய்வது தஞ்சாவூர் கலைத்தட்டுகளைதான். அற்புதமான கலை பொக்கிஷம் என்றுதான் கூறவேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் வரவு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஆக்கிரமிப்பு என்று எத்தனை வரவுகள் வந்தாலும் நான்தான்... கிங்... என்று இன்றும்... இனி என்றென்றும் தன்னை உயர்த்திக்கொண்டே இருக்கும் அற்புத கலையம்சம் கொண்டவை இந்த தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள்.


இந்த தஞ்சாவூர் ஆர்ட் பிளேட் எனப்படும் கலைத்தட்டுக்கள் தமிழ்நாடு கலைத்திறன் வளர்ச்சிக்கழகம் எனப்படும் பூம்புகார் கலைப்பொருட்கள் விற்பனை நிலையம் வாயிலாக உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் விளக்கமாக பேசினார் பூம்புகார் விற்பனை நிலைய மேனேஜர் எஸ். பழனிவேல் அவர்கள். இவர் உற்பத்தி மற்றும் விற்பனை யூனிட்டின் மேனேஜர்.


18ம் நூற்றாண்டின் மத்தியில் இந்த கலைத்தட்டுக்கள் நமது தஞ்சைக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த கலை எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதை முழுவதும் வளர்த்தெடுத்தது தஞ்சைதான். அதனால்தான் தஞ்சை கலைத்தட்டுகள் என்றே கூறப்படுகிறது. மன்னர் காலத்தில் இவை பரிசு கொடுக்கவும், நினைவுப்பொருளாக வழங்கவும் வளர்க்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த கலைத்தட்டுகளை உருவாக்கி வந்துள்ளனர். 


பின்னர் 19ம் நூற்றாண்டில் அதாவது 1970ம் ஆண்டு வரை அதிகம் வெளிப்படாத இந்த கலையம்சம் பின்னர்தான் அதிகளவில் வெளியில் தெரிய ஆரம்பித்தது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே செய்து வந்தனர். இந்த கலையை அனைவரும் கற்றுக் கொள்ள பூம்புகார் (தமிழ்நாடு கலைத்திறன் வளர்ச்சிக்கழகம்) ஏற்பாடு செய்தது. சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இந்த கலைத்தட்டுக்கள் உருவாக்கும் விதத்தை மற்றவர்களும் அறிந்து கொள்ள உதவித் தொகையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது தஞ்சையில் இந்த கலைத்தட்டுகள் செய்பவர் 300 பேர் உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


இந்த கலைத்தட்டுகள் மிகவும் அரிய பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இதில் கடவுள் உருவங்கள் அற்புதமாக செய்யப்படுகிறது. சுத்தமான வெள்ளியை கொண்டே இவை உருவாக்கப்படுகிறது. இதில் எவ்வித கலப்படமும் இருக்காது. பிற வெள்ளிப்பொருட்களில் மற்ற உலோகங்களின் கலப்படம் இருக்கும். ஆனால் தஞ்சாவூர் கலைத்தட்டுக்களில் உள்ள கடவுள் உருவங்கள் சுத்தமான வெள்ளியை கொண்டே செய்யப்படுகிறது.


காலத்திற்கு தக்க மாற்றம் வேண்டும் என்பதால் தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள கலைத்தட்டுக்கள் தயாரிக்கும் பிரிவில் ஆரம்பகாலத்தில் இருந்தே இருந்து வந்த கடவுள் உருவங்களுடன் தற்போது கம்பெனி லோகோ, நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் உருவங்கள் அதாவது காந்தியடிகள், நேரு, அப்துல்கலாம் உட்பட பல தலைவர்களின் உருவங்களை செய்து தருகிறோம். 


பறவைகள், இயற்கை சார்ந்த உருவங்கள் என்று தஞ்சாவூர் கலைத்தட்டுகளை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளோம். இந்த தஞ்சை கலைத்தட்டுக்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு புவிசார் குறியீட்டை வாங்கி விட்டோம். இவை தஞ்சையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதற்காக மிகப்பெரிய ஆதாரமே புவிசார் குறியீடு. இது தஞ்சைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை.


தஞ்சையில் உருவாக்கப்படும் இந்த கலைத்தட்டுகள் இந்தியா முழுவதும் பூம்புகார் விற்பனை நிலையம் வாயிலாக ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் விற்பனை ஆகி வருகிறது. தஞ்சை பூம்புகார் உற்பத்தி நிலையத்தில் 12 பேர் இந்த பணியில் உள்ளனர். இந்த கலைத்தட்டுக்கள் எவ்வித இயந்திரங்களை வைத்தும் உருவாக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க மனித உழைப்புதான் என்று விளக்கமாக கூறியவர்... கலைத்தட்டுகள் உருவாக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்.


அங்கு பணியாளர்களின் நுணுக்கமான இந்த கலை அம்சத்தை உருவாக்கும் பணியில் மும்முரமாக இருந்தனர். சுத்தமான வெள்ளி இங்கு பல்வேறு உருவமாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பணியும் முடிந்து பாலீஸ் செய்யப்படுகிறது. இங்கும் எவ்வித ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. புளி, பூந்திக்கொட்டை, கரித்தூள் போட்டு இந்த தஞ்சாவூர் கலைத்தட்டுகளை சுத்தம் செய்கின்றனர். சற்று நேரத்தில் அற்புதமான கலைவடிவம் உருவாகிறது.


5 இன்ச் விட்டத்தில் ஆரம்பித்து அதிகபட்சமாக 36 இன்ச் விட்டம் (அதாவது ஏறக்குறைய 3 அடி அளவு) உள்ள கலைத்தட்டுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறைந்த விலை என்றால் ரூ.500ல் ஆரம்பம் இந்த கலைத்தட்டுகள் ரூ.50 ஆயிரம் வரையில் செய்யப்படுகிறது. அற்புதமான, நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் இந்த தஞ்சை கலைத்தட்டுக்களை தொழிலாளர்கள் செய்து முடிக்கின்றனர். தஞ்சையில் இருந்து உலகம் முழுவதும் இந்த கலைத்தட்டுகள் பிரயாணம் ஆகிறது.


அதுமட்டுமா? பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் என்று விமானங்களிலும் இந்த கலைத்தட்டுக்கள் பயணம் செய்து தஞ்சையில் புகழ் கொடியை பறக்கவிடுகிறது. இந்த கலைத்தட்டுக்களின் அழகினை கண்டு வியப்புறும் வெளிநாட்டினர் தேடி வந்து இவற்றை வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பிளாஸ்டிக் பொருள் உடைத்தால் குப்பைக்குதான்... எலெக்ட்ரானிக்ஸ் பரிசு பொருட்களின் நிலையும் கொஞ்ச காலம் தான். ஆனால் இந்த அற்புதமான, அம்சமான, அட்டகாசமான தஞ்சாவூர் கலைத்தட்டுக்களை பரிசாக கொடுத்தால் இன்றல்ல... இருக்கும் நாள் வரைக்கும் மதிப்பு ஏறிக்கொண்டேதான் இருக்கும். அந்தளவிற்கு இவை பெருமையும், விலையும் உயர்வானது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 


மேலும் மேனேஜர் பழனிவேல் அவர்கள் கூறுகையில், கலைகளை வளர்க்க வேண்டும் என்பதே பூம்புகாரின் முக்கிய எண்ணம். இதற்காகவே கலைப் பொருட்கள் செய்வதில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு உட்பட்ட கலைப்பொருட்கள் செய்பவர்களுக்கு அடுத்த தலைமுறை கைவினைஞர்கள் என்ற விருது வழங்கப்படுகிறது.


இதற்காக போட்டித் தேர்வு நடத்தி அதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாவட்ட அளவில் அனைத்து (கலைப்பொருட்களில்) ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும், விருதும் வழங்கப்படுகிறது.


மேலும் மாநில அளவிலான விருதும் வழங்கப்படுகிறது. கலைத்திறனில் குழுவாக செயல்படுபவர்களுக்கு குழு விருதும் வழங்குகிறோம். இது கைவினை கலைஞர்களை மேலும் மேலும் ஊக்குவிக்க செய்யப்படுகிறது. சிறந்த ஏற்றுமதியாளர் விருதும் வழங்கப்படுகிறது.


65 வயது நிரம்பியவர்களில் கலைத்திறனில் சிறந்து விளங்கியவர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் என்ற தாமிர பட்டய விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பணம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இதற்காக சென்னையில் பெரிய அளவில் விழா நடத்தப்படும். 


கைவினை கலைகள் ஒருவருடன் முடிந்து விடக்கூடாது அது அனைவரிடமும் பரவ வேண்டும் என்பதால் பல கைவினை கலைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி எடுப்பவர்களுக்கு உதவித்தொகையுடன் இதை நடத்தி வருகிறோம். திருக்காட்டுப்பள்ளியில் சீவாளி (நாதஸ்வரம் ஊத பயன்படுத்தப்படுவது) பயிற்சி, தஞ்சையில் கலைத்தட்டு செய்ய பயிற்சி, தஞ்சாவூர் பெயிண்டிங் பயிற்சி என்று நடத்தி வருகிறோம். 


இதை ஆர்வமுடன் கற்பவர்கள் வாயிலாக கைவினை கலை பிறகுக்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இவை மாநில அரசின் உதவியுடன் நடத்தப்படுகிறது.


தற்போது மத்திய அரசிடன் இணைந்து உதவித்தொகையுடன் கூடிய நெட்டி சிற்பம் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறப்பான பயிற்சியாளர்கள், பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேவையான பொருட்கள், உதவித்தொகை ஆகியவற்றை அளித்து கைவினை தொழிலை ஊக்குவித்து வருகிறோம் என்றார்.


சும்மாவா சொன்னார்கள்... கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்... கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் என்று... கைவினை தொழிலை வளர்க்க பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றிப்பெறும் பூம்புகாரை பாராட்டுவோம்... எந்த கலையும் அழியாக்கூடாது... அவை வளர வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசையும் பாராட்டுவோம்.


Find Out More:

Related Articles: