அகரம் புத்தக வெளியீட்டு விழா
சென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா இன்று (18/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள்.
பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான 'உலகம் பிறந்தது நமக்காக' எனும் இரண்டு நூல்களை வெளியிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது :
"இந்திய அளவில் தமிழக பள்ளிக் கல்வி சிறந்த முன்னுதாரணங்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு, மாணவர் திறன் மேம்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆங்காங்கு நடைபெற்று வரும் மாற்றங்கள் வருங்காலங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் பெரும் போட்டியை உருவாக்கும்
கல்வியுதவி என்பது ஒருவரின் குடும்பத்தையே மேம்படுத்தும் உதவி. அப்பெரும் உதவியை திரு.சூர்யா “அகரம் அறக்கட்டளை”மூலம் செயல்படுத்துவது அவரது மனித நேயத்தை காண்பக்கின்றது. கல்வி நிகழ்வான இந்த புத்தக வெளியிட்டு விழாவில் அரசு அமைக்கவிருக்கும் புதிய திட்டங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்
1. இனி 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சரலமாக ஆங்கிலம் பேச வாரம் ஒரு நாள் 45 நிமிடம் பயிற்சி அளிக்கப்படும்
2. 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் வரும் விடுமுறை நாட்களில் அவர்கள் சுற்றுபுறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பயிற்சி அளிக்கப்படும்” என்று கூறினார்.".