சென்னை:
அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நத்தம் விஸ்வநாதனை அதிரடியாக நீக்கம் செய்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதிமுக ஐவர் அணியில் செம கெத்து காட்டி வலம் வந்தவர் நத்தம் விஸ்வநாதன். தொடர்ந்து வந்த புகாரை அடுத்து ஜெ., இவரை கட்டம் கட்டினார். இதனால் அதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார் நத்தம் விஸ்வநாதன்.
சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. போனால் போகிறது என்பது போல் அதிமுக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இப்போது கொடுத்தவனே பறித்து கொண்டான் என்பதுபோல் அதுவும் பறிக்கப்பட்டுள்ளது.
நத்தம் விஸ்வநாதன் வீடு, அலுவலகம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திய நிலையில் அவரது அமைப்பு செயலாளர் பதவியை ஜெ., பறித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.