சென்னை:
காவிரி நீர் விவகாரத்தில் கன்னட நடிகர்களை, தமிழ் நடிகர்களோடு ஒப்பிட்டு பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த தமிழ் இளைஞரை கன்னட அமைப்பினர் செமத்தியாக அடித்து உதைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தை எரித்தும், அவரது உருவபொம்மையை பாடை கட்டி எடுத்து சென்றும் அநாகரீகமான நடந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக பல்வேறு அதிர்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கன்னட நடிகர்களையும், தமிழ் சினிமா நடிகர்களையும் ஒப்பிட்டு, பெங்களூரில் வசிக்கும் சந்தோஷ் என்ற தமிழ் இளைஞர் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் சிலர், அவரை கன்னத்தில் பலமுறை அடித்ததோடு, அவரை மண்டியிடச் செய்து மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.