விரும்பியதை சாப்பிடுகிறார்கள்... விருப்பப்பட்டு சாப்பிடுகிறார்கள்... வீணாக்காதீர் உணவை என்று... தஞ்சையில் ஆரம்பம் ஆன "அம்மா"

Sekar Tamil
தஞ்சாவூர்:
விரும்பியதை சாப்பிறாங்க... விருப்பப்பட்டு சாப்பிடுகிறார்கள்... தஞ்சையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அம்மா மெஸ்சில்... வணிக ரீதியாக இருந்தாலும் முழுக்க முழுக்க நடுத்தர மக்களின் உணவு தேவைக்கு ஏற்ப கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப உணவு சாப்பிடலாம் இந்த உணவகத்தில்.


சோழ நாடு என்றாலே சோறுடைத்து என்பார்கள். அந்தளவிற்கு சோழநாட்டின் வளம் உலகம் எங்கும் பரவியிருந்தது. முப்போகம் விளைந்த சோழ நாட்டில் இன்று எப்போகம் விளையும் என்பதே தெரியாத நிலை... விலைவாசி உயர்வு இறக்கை கட்டிக் கொண்டு...
இல்லை... இல்லை... ராக்கெட் கட்டிக்கொண்டு உயரே.. உயரே சென்று விட்டது என்பதுதான் அனைவரும் அறிந்த உண்மை. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டி போரடித்த சோழ வள நாடு என்ற பெருமை தஞ்சைக்கு உண்டு.


சும்மாவா சொன்னார்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று. ஊருக்கு சோறு போட்ட புண்ணிய பூமி இது. மண்ணை நம்பியவர்களை என்றும் கைவிட்டதில்லை. ஆனால் இன்று நிலைமையே தலைகீழ்தான். நெல் விளைந்த பூமிகள் இன்று கான்கிரீட் வீடுகளை அறுவடை செய்கிறது. பச்சை பால் வாடையுடன் தென்றல் காற்றுடன் இசைந்தாடும் நெற்கதிர்கள் விளைந்த வயல்களா இது... பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிணம் போல் சிமெண்ட், கல்லால் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகளாக முளைத்துள்ளன.


உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும்தான் மக்களின் தேவை என்பது ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. இதில் உணவு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இன்று வயிராற மக்கள் சாப்பிட முடிகிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதிலும் பிழைப்புக்காக வெளியூர் சென்று வரும் மக்களின் நிலை அந்தோ பரிதாபம்தான்.


ஓட்டல்கள் வரிசையாக ரவுண்டு கட்டி மக்களின் பர்சை பதம் பார்த்து விடுகின்றன. வேலைக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வயிறு போடும் போட்டுக்கு உணவருந்த உணவகம் தேடிச் செல்பவர்கள் விலை பட்டியலை கண்டு மலைத்துதான் போகின்றனர். மதிய உணவு ரூ.70க்கு குறைந்து சாப்பிட முடியாது.


சரி தயிர்சாதமோ... எலுமிச்சை சாதமோ... சாம்பார் சாதமோ சாப்பிடலாம் என்றால் அதன் விலையும் ரூ.30க்கு குறைந்து கிடையாது. என்ன செய்வது கிடைத்ததை சாப்பிட்டோ... ஒரு டீயோ... பன்னோ தின்று பசியாறும் நபர்கள் ஏராளம்...ஏராளம். இப்படிதான் அனைத்து நகரங்களிலும் விலை பட்டியல் தொட்டாலே "ஷாக்" அடிக்கும் நிலைதான்.


தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினையே அழித்துவிடுவோம் என்றார் பாரதி... ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்கள் சரியான உணவின்றி கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை. உலகிற்கே உணவை விளைவித்த பெருமைமிகு தஞ்சை தரணியில்தான் தற்போது "அம்மா மெஸ்" என்ற பெயரில் ஒரு உணவகத்தை திறந்துள்ளார் பி.ஏ. பட்டதாரியான எம்.ஜி.ராஜேஸ்.
இவருக்கு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒரு கிராமம்தான் சொந்த ஊர். இவருக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் இருக்கிறார் என்.வி.கருணா. இவர் உறவு முறையில் ராஜேசுக்கு மாமா முறையாம்.

 எம்.ஜி.ராஜேஸ்


இவர் சென்னையில் ராஜா ராணி மேரேஜ் பிளானர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல தொழில்கள் நடத்தி இருந்தாலும் புதுமையிலும் புதுமையாக வீணாகும் உணவை கண்டு மனம் கொதித்து இப்படி ஒரு உணவகத்தை தொடங்கி உள்ளார். கொடுக்கும் உணவு தரமானதாகவும் இருக்க வேண்டும். சாப்பிடுபவர்கள் அதை வீணாக்கவும் கூடாது என்ற நல்ல எண்ணம். வியாபார ரீதியாக இருந்தாலும் இதில் சமூக சேவையும் அடங்கிதான் உள்ளது.


ஓட்டலுக்கு சென்று சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் குறைந்தது ரூ.70 கண்டிப்பாக தேவை. அவர்கள் கொடுப்பதைதான் சாப்பிட வேண்டும். அது எப்படி இருந்தாலும் சரி. வாங்கிட்டோமே என்று விருப்பமில்லாதவற்றையும் கொடுத்த பணத்திற்காக சாப்பிடும் நிலைதான். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது போலவும், உணவை வீணாக்காமல் விரும்பியதை சாப்பிட வழி செய்துள்ளார் ராஜேஸ். எப்படி தெரியுங்களா?


இவரது மெஸ்சில் சாப்பாடு- ரூ.10, சாம்பார், ரசம், மோர்குழம்பு, வற்றல் குழம்பு ஆகியவை தனித்தனியே ரூ.7, மோர்-ரூ.5, பொறியல் வகைகள்... ரூ. 7 என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை. இதில்தான் அடங்கியுள்ளது சமூக சிந்தனை. எது வேண்டுமோ அதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.


உதாரணமாக கையில் 20 ரூபாய்தான் உள்ளது என்ன சாப்பிடலாம்... சாப்பாடு 10 ரூபாய், சாம்பர் 7 ரூபாய்... திருப்தியாக சாப்பிட்டுவிட்டு வரலாம். இது சைவ சாப்பாடு என்றால்... அசைவ சாப்பாட்டு பிரியர்களுக்கும் இப்படியே தனித்தனியாக விலைப்பட்டியல். கையில் குறைந்த பணம் உள்ளதே என்று வெட்கப்படும் நிலை மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். 


என்ன வேண்டுமோ... அதை மட்டும் பெற்று சாப்பிட வழி செய்துள்ளார் ராஜேஸ். ஓட்டலில் அனைத்தும் சேர்த்து ரூ.70க்கு வாங்கி பிடிக்காததை வீணடிக்கும் நிலை இனி தேவையில்லை என்பதை இந்த அம்மா மெஸ் உணர்த்துகிறது.


உதாரணமாக ஒருவருக்கு வற்றல் குழம்பு பிடிக்காது... மற்றொருவருக்கு ரசம் பிடிக்காது... இல்ல சாம்பார் பிடிக்காது அவர்கள் ஓட்டலில் வைக்கும் அதை அப்படியே ஒதுக்கிவிடுவர். அது வீணாக சாக்கடையில்தான் கொட்டப்படும். அதேபோல் வைக்கப்படும் உணவு அனைவராலும் சாப்பிட முடியுமா என்றால் முடியாது என்றுதான் கூறவேண்டும்.


அப்போது அந்த சாப்பாடு குப்பைக்குதான் போகும். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வுடன் இந்த மெஸ்சை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார் ராஜேஸ். இவருக்கு பக்கபலம் இவரது அனுபவங்கள்தான். அம்மாவிடம் கற்றுக்கொண்ட அந்த உணவு தயாரிக்கும் முறையை இப்போது நடைமுறைப்படுத்தி பார்க்கிறார்.


இவரது இந்த எண்ணத்திற்கு மக்களிடமும் செம வரவேற்பு கிடைத்துள்ளது என்பதுதான் பெரிய விஷயம். கூலி தொழிலாளர்கள் முதல் மார்க்கெட்டிங் செய்பவர்கள் வரை இங்கு யாரும் வெட்கப்படுவதில்லை.


எனக்கு இதுதான் வேண்டும்... என்று தங்களுக்கு வேண்டியதை மட்டும் வாங்கி அதற்கு மட்டும் பணம் கொடுக்கின்றனர். அருகில் மருத்துவமனைகள் அதிகம் இருப்பதால் நோயாளிகளுக்கு உணவு வாங்கி கொடுக்க உறவினர்கள் ஓட்டலுக்கு சென்று ரசம் மட்டும் கேட்டால் யாரும் தருவதில்லை. ஆனால் அம்மா மெஸ்சில் உணவு ரூ.10க்கும்... ரசம் ரூ.7க்கும் வாங்கி விடலாம். இதை பலரும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.


தொடங்கிய சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை அம்மா மெஸ் பெற்றுவிட்டது என்றே கூறலாம். அதுமட்டுமா... இங்கு உபயோகப்படுத்தப்படும் பால்... பாக்கெட் பால் அல்ல என்று உறுதியுடன் கூறுகிறார் ராஜேஸ். சாம்பார், ரசம் மற்றும் அசைவ வகைகள் தயாரிக்க பயன்படும் மசாலா பாரம்பரிய வழக்கப்படி அரைக்கப்பட்டவை. பாக்கெட்களில் விற்கப்படும் எவ்வித மசாலாக்களையும் இவர் பயன்படுத்துவது இல்லையாம்.


தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த மெஸ்சை விரைவில் தஞ்சையில் மேலும் சில இடங்களில் திறக்க முடிவு செய்துள்ளாராம் ராஜேஸ். அதுமட்டுமா? தனக்கு சொந்தமான வயலில் இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்க செய்து அதை வரும்காலங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக வயலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறதாம். வாழ்த்துக்கள்... ஒருவேளை வயிராற சாப்பாடு போடுவது என்பது சிறந்த செயல் அல்லவா.


குறைந்த லாபம் என்றாலும் அதை நிறைவுடன் செய்யும் ராஜேஸை பாராட்டலாமே! பாராட்டுவோம்... நாம் பார்த்தவரை வாங்கிய சாப்பாட்டை இதுவரை யாரும் வீணாக கீழே கொட்டவில்லை. யாராவது சிறிது பொறியலோ... சாப்பாடோ வைத்து விட்டால் அவர்களை கூப்பிட்டு சார்... சாப்பாட்டை வீணாக்க கூடாது என்பதால்தான் இப்படி ஒரு மெஸ்சை ஆரம்பித்தேன். நீங்கள் வீணாக்காதீர்கள் ப்ளீஸ் என்கிறார். இவரது இந்த அட்வைஸ்சும் நன்றாக வேலை செய்கிறது. 


"உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது" என்பார்கள். ஆனால் உழவன் என்றும் கணக்கு பார்த்ததில்லை. காரணம் அவனுக்கு கணக்கு பார்க்கும் மனதும் இல்லை. அத்தகைய நிலையில்தான் இந்த உணவகம் செயல்படுகிறது. பயன்படுத்துபவர்கள் பாராட்டுகிறார்கள். இதே போல் ஒவ்வொருவரும்... உணவை வீணாக்காமல் இருந்தால்... எத்தனையோ பேருக்கு அது செல்லுமே... ஆடம்பரத்திற்காகவும், பகட்டிற்காகவும் சாப்பிடுபவர்கள் மத்தியில் ஒட்டிய வயிறும்... காய்ந்த மனதுடன் வாழும் மக்களையும் நினைத்து பார்ப்போம்... அட ஒரு வேளை நீங்கள் யாருக்காவது உணவு வாங்கி தர நினைத்தால் பணம் அதிகம் செலவு செய்ய மனமில்லாமல் ஒதுங்கி விடாதீர்கள்... இங்கு சென்று 20 ரூபாய்க்குள் உணவு வாங்கி தரலாம். இது எங்களுக்கும் பொருந்தும்... உணவை வீணாக்க வேண்டாமே... யோசிப்போம்... சிறுதுளியே பெரு வெள்ளம்... உணர்வோம்... உணர்த்துவோம்...


Find Out More:

Related Articles: