ஓடும் ரயிலில் "ஓட்டை" போட்டு கோடிக்கணக்கில் பணம் "ஆட்டை"

Sekar Tamil
சேலம்:
ஓடும் ரயிலில் மேற்கூரையில் ஓட்டை போட்டு கோடிக்கணக்கான பணத்தை ஆட்டை போட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் முதல்முறையாக, ஓடும் ரயிலில் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் வழியில், ரயில் பெட்டியின் மேற்கூரையை உடைத்து நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


ரயில் இன்ஜினுக்கு அருகில் இருந்த பெட்டியில், சேலம், நாமக்கல், ராசிபுரம் என பகுதிகளில் இருந்து இந்தியன் ஓவர்சீஸ், இந்தியன் வங்கி என பல வங்கி கிளைகளில் சேகரிக்கப்பட்ட பழைய, கிழிந்த என்று ரூ.342 கோடியே, 75 லட்சம் ரூபாய் நோட்டுகள் மரப்பெட்டிகளில், 'பார்சல்' செய்யப்பட்டு ஏற்றப்பட்டு இருந்தன.


இந்த ரூபாய் நோட்டுகள், சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 4:40 மணிக்கு, சென்னை எழும்பூருக்கு ரயில் வந்து சேர்ந்தது. அங்குதான் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பயணிகள் வெளியேறிய பின்னர் பணம் பாதுகாப்புடன் உள்ளதா என்று சோதனை செய்தபோது  'சீல்' உடைக்கப்படாமல் இருந்துள்ளது.


பின், பார்சல் வந்த மூன்று ரயில் பெட்டிகள், எழும்பூர் ரயில் நிலைய பார்சல் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஊழியர்கள், பணம் இருந்த ரயில் பெட்டியை திறக்க பெட்டியின் உட்பகுதியில் வெளிச்சம் வந்ததால் அதிர்ந்து போய்விட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டி பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.


பலகோடி ரூபாய் அளவிற்கு கொள்ளை போய் உள்ளது. ஆனால் மொத்த தொகை தெரிய வரவில்லை. 


இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அரிசங்கர் வர்மா அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: 


சேலம்-சென்னை ரயில் வழக்கமான நேரத்தை விட 10 நிமிடம் முன் கூட்டியே விருத்தாசலம் சென்றடைந்தது. விருத்தாசலத்தில் இருந்து -சென்னைக்கு 10 நிமிடம் காலதாமதமாக சென்றடைந்தது.


இந்த ரயிலில் 23 டன் எடைக்கான பணம் மட்டுமே வங்கி அதிகாரிகள் செலுத்தினர். பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது என்பதை வங்கி அதிகாரிகள் எங்களிடம் தெரிவிக்கவில்லை.


பழைய நோட்டுகள் இருப்பதாக கூறி வங்கி அதிகாரிகள் கட்டணம் செலுத்தினர். ரிசர்வ் வங்கி தரப்பில் எவ்வித பாதுகாப்பும் கோரப்பட வில்லை. என அரிசங்கர் வர்மா கூறினார். 


இதுகுறித்து எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில்வே ஐ.ஜி. பாரி தலைமையிலான போலீசார் விசாரடிணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இதுதான் முதல்முறையாக இப்படி ஒரு கொள்ளை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles: