சோமாலியா:
தீவிரவாதத்தின் கரங்கள் இந்த பூமி பந்தை வளைத்து பிடித்து விட்டதுபோல்தான் தோன்றுகிறது. எங்கும்.. எங்கெங்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களும், தற்கொலைப்படை தாக்குதல்களும் நீடித்துக் கொண்டே வருகிறது. இது சோமாலியாவில் நடந்த சோகம்.
சோமாலியாவில் விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்காவின் சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசு விமான நிலையம் அருகே விமானப்படை தளம் உள்ளது. இங்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் இங்கு நேற்று காலை நடந்த ஒரு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இந்த விமானப்படை தளத்தின் நுழைவு வாயிலை நோக்கி இரண்டு வாகனங்கள் வேகமாக வந்தன. பாதுகாப்பு படையினர் தடுத்த போது ஒரு வாகனம் நுழைவு வாயிலில் வெடித்துச் சிதறியது.
மற்றொரு வாகனம் அருகில் உள்ள சோதனைச்சாவடி அருகில் வெடித்தது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 13 வீரர்கள் பலியாகினர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அல் சகாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன கொடுமையான சம்பவம் இது. தீவிரவாதம் உச்சக்கட்டத்தை நோக்க பயணிக்கிறது போல் உள்ளது.