அக்னி சிறகுகள்' படக்குழுவுக்கு வாய்ப்பூட்டு போட்ட இயக்குநர் நவீன்
நடிகர் அருண் விஜய் என்றுமே தன் ரசிகர்களையும், வலைப்பூ வாசிகளையும், ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர்களையும் வசீகரிக்கத் தவறுவதேயில்லை. இதோ இன்னும் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அருண் விஜய். ஆம்... 'அக்னி சிறகுகள்' படத்தில் அவர் ஏற்றிருக்கும் ரஞ்சித் என்ற வேடத்தின் தோற்றம்தான் இப்போது அனைவரின் பேசு பொருளாகவும் ஆகியிருக்கிறது.
இது குறித்து 'அக்னி சிறகுகள்' படத்தின் இயக்குநர் நவீன் கூறியதாவது...
அருண் விஜய் எப்போதுமே உணர்ச்சிகள் பக்கம் சாய்ந்திராத, பேய் மனப்பான்மை கொண்ட அசாதாரமான மனிதர். மேலும் அவர் பிடிவாதமான மற்றும் கடினமான உறுதி கொண்டவர். அருண் விஜய் மற்றும் விஜய் ஆன்டனி இருவருமே 'அக்னி சிறகுகள்' படத்தில் ஏற்றிருக்கும் வேடங்களில் வன்முறையை சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள்தான் என்றாலும் இருவருக்குமிடையே நியாயங்கள் வேறுபடும்" என்றார்.
அப்படியானால் 'அக்னி சிறகுகள்' எதைப் பற்றிய கதை? நல்லதுக்கும் தீமைக்கு எதிரான போராட்டமா அல்லது பொது நோக்கம் ஒன்றுக்காக நல்லது தீதுவுடன் கை கோர்க்கிறதா என்ற கேள்வியை இயக்குநர் முன் வைத்தால் புன்னகையுடன் பதிலளித்தார்....
"பொதுவாக நட்சத்திரங்கள்தான் கதையைப் பற்றி இயக்குநர் எதையும் வெளியே சொல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார் என்று சொல்வார்கள். ஆனால் எனது விஷயத்தில், கதையையோ காட்சி அமைப்புகளையோ சொல்லக்கூடாது என்று ஒட்டு மொத்த படக்குழுவுக்குமே வாய்பூட்டு போட்டிருக்கிறேன். காரணம் ஒரு முழு நீளப் படம் முழுவதிலும் ரசிகர்களுக்கு ஆச்சரியங்களைத் தரவேண்டும் என்ற ஆசைதான். ஆனால் ஒன்றை மட்டும் இப்போது என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 'அக்னி சிறகுகள்' ஆக்ஷன், உணர்வு பூர்வ காட்சிகள், சாகசங்கள், சஸ்பென்ஸ் என்று அனைத்தும் நிரம்பிய பொழுது போக்குப் படம்" என்றார்.
மேலும் சண்டைக் காட்சிகள் குறித்து இயக்குநர் நவீன் தெரிவித்ததாவது....
"ரஷ்யாவில் உள்ள ஸ்டாலின்கிராடில் புகழ் பெற்ற போர்ஸ் சுப்ரீமஸியைச் சேர்ந்த விக்டர் ஐவானோவ் என்ற கலைஞர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருந்தார். பிரபல ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த உலகப் புகழ் பெற்ற ஆக்ஷன் வடிவமைப்பாளர் இவர். சிறப்பான சண்டைக் காட்சிகளுக்காகவே வழங்கப்படும் டாரஸ் வோர்ல்ட் ஸ்டண்ட் அவார்ட் விருதை இரண்டுமுறை இவர் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர கஜகிஸ்தானில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகளை மற்றொரு உலகப் புகழ் பெற்ற ஜெய்டாக் என்பவரின் தலைமையிலான நோமட்ஸ் ஸ்டண்ட் டீம் வடிவமைத்திருந்தது. அருண் விஜய் ஆக்ரோஷமாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதைப் பார்த்த இக்குழுவினர் மிருகத்தைப்போல் சண்டையிடுவதாகச் சொல்லி பிரமித்தனர்" என்றார்.
அம்மா கிரியேஷன்ஸுக்காக டி.சிவா தயாரிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் கஜகஸ்தான் செல்ல இருக்கும் படக்குழு, அநேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் ஐரோப்பாவுக்கும் செல்லத் திட்டமிட்டிருக்கிறது. ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்ஷரா ஹாசன் மாற்றப்பட்டிருப்பதால், முன்னர் ஷாலினி பாண்டே நடித்த காட்சிகள் மீண்டும் அக்ஷரா ஹாசன் நடிக்க, படமாக்கப்படவிருக்கிறது. அக்ஷராவின் வேடம் குறித்து இயக்குநரிடம் பேசியபோது, "அக்ஷரா இந்தப் படத்தில் யாருக்கும் ஜோடியாக நடிக்கவில்லை. அருண் விஜய் மற்றும் விஜய் ஆன்டனிக்கு இணையான பாத்திரப்படைப்பில் நடிக்கிறார் அக்ஷரா" என்றார்.
'அக்னி சிறகுகள்' மூலம் தமிழ்ப்படவுலகுக்கு அறிமுகமாகிறார் ரெய்மா சென். சமீபத்தில் இவரது பாத்திரப் படைப்பு குறித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் பிரகாஷ் ராஜ் ஜே.எஸ்.கே. ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின்போது உலகெங்கும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்க, கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார்.