வடிவேலுக்கு சுசீந்திரன் கண்டனம்!
இயக்குனர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். நடிகர் வடிவேலு தன்னை கதாநாயகனாக்கி அழகு பார்த்த இயக்குனரை ஒருமையில் பேசியது இயக்குனர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
சமுத்திரக்கனி, நவீன் உள்பட சில இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இயக்குனர் சுசீந்திரனும் வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பது "வடிவேலு அவர்கள் 23ஆம் புலிகேசி இயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கர் அவர்கள் பேசிய விதம் கண்டிக்கத்தக்கது. சிம்புதேவன் 23ஆம் புலிகேசி மூலம் இயக்குனராக அறிமுகமானார், முதல் படத்திலேயே வெற்றிபடத்தை தந்தார். அதன்பிறகும் தரமான திரைப்படங்களை தந்துள்ளார்.
இயக்குனரை அவன், இவன் என மரியாதை இல்லாமல் பேசிய விதம் தவறான அணுகுமுறை. புலிகேசிக்கு பிறகு நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்களின் ரிசல்ட் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குனர் என்ற முறையில் வடிவேலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.