சென்னை:
ஏங்கினேன்... கிடைக்குமா என்று ஏங்கினேன்... என்று தான் தவித்த கதையை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார் இவர்.
இவர் யார்? வேறு யார். கோலிவுட்டில் இப்போது கிடுகிடுவென வளர்ந்து வரும் காமெடியன் ரோபோ சங்கர்தான். இவர் எதுக்கு ஏங்கினார் என்று அவர் சொல்வதை கேளுங்களேன்.
வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து நடித்துள்ளார் ரோபோ சங்கர். சிவாஜி வீட்டைச் சேர்ந்த பிரபு, விக்ரம் பிரபு நடிக்கும் படங்களில் எல்லாம் அந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கு சிவாஜி வீட்டில் இருந்து ஸ்பெஷலாக சாப்பாடு படப்பிடிப்பு தளத்துக்கே வரும். இது அந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது.
அப்படியே... ‘வீரசிவாஜி’ படத்தின் படப்பிடிப்பின் போதும் சிவாஜி வீட்டிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டு படக்குழுவினருக்கு பரிமாறப்பட்டுள்ளது. நெடுநாட்களாக சிவாஜி வீட்டு சாப்பாட்டை ருசித்து பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்துள்ளார் ரோபோ சங்கர்.
இப்போது சேர்ந்து நடிப்பதால் அந்த ஆவல் நிறைவேறிவிடும் என்று நினைத்திருக்க... ஒரு படத்தில் கோவை சரளா 4 பந்தி தள்ளி தம்மாதுண்டுதான் கிடைத்தது என்பரே... அதுபோல் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவாஜி வீட்டு சாப்பாட்டை படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின்போதுதான் ரோபா சங்கரால் சாப்பிட முடிந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் சாப்பிடலாம் என்று நினைத்து வர... படக்குழுவினர் அனைத்தையும் காலி செய்து வைத்து விடுவார்களாம். இதனால் நொந்து போய் இருந்த இவர் கடைசி நாளில் சிவாஜி வீட்டு சாப்பாடு கிடைக்க வெளுத்து வாங்கிவிட்டாராம். அத்தோடு விட்டாரா? தனது வீட்டுக்கும் அதை எடுத்து சென்று தனது மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார். சிவாஜி வீட்டு சாப்பாடு என்றால் சும்மாவா...