தஞ்சாவூர்:
தஞ்சைக்கு பெருமை பெரிய கோயில்... அரண்மனை என்று பெருமைகள் வரிசைக்கட்டி நிற்கும். இவற்றில் சேர்க்க வேண்டிய அடுத்தது முந்திரி. மந்திரியாக இருந்தாலும் முந்திரி வேண்டும் என்றால்... தஞ்சைக்கு அருகில உள்ள ஆதனக்கோட்டைக்குதான் செல்வார். காரணம்... காரணம்... அவ்வளவு பெருமை இந்த ஊரின் முந்திரிக்கு...
பாயசம் ஆக இருந்தாலும் சரி... கேசரியாக இருந்தாலும் சரி அதுக்கு அழகு முந்திரி... முந்திக் கொண்டு வந்ததாலா... இனிப்பு வகைகளில் ஆரம்பித்து பிஸ்கட், மிக்சர் என்று எல்லாவற்றிலும் முந்திரிக்கு இடம் உண்டு. உடலுக்கு வலு சேர்க்க முந்திரி எடுத்துக் கொள்பவர்களும் உள்ளார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த முந்திரிக்கு முதலிடம் கொடுத்துள்ளது ஆதனக்கோட்டை.
இது எங்கு இருக்கு... தஞ்சாவூர்-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் விர்ரென்று விரட்டிக் கொண்டு செல்லும் வாகனங்கள் கூட ஆதனக்கோட்டையில் ஆயாச மூச்சு விட்டு நிற்கும். ஊரை நெருங்குவதற்கு முன்பே முந்திரி வறுப்படும் வாசம் ஆளை தூக்கி விடும். ஆதனக்கோட்டையின் எல்லை தொடங்கி முடிவு வரை சாலையின் இருபுறமும் வரிசையாக குடிசைகள். இவைதான் முந்திரிகளின் தொழிற்சாலைகள் என்றால் நம்புங்கள்...நம்பித்தான் ஆக வேண்டும்.
தகதகவென்று எரியும் நெருப்பும், நீண்டு நெளியும் புகையும் கவனத்தை ஈர்க்க... மூக்கு முந்திரியின் வாசனையை நுகர... வித்தியாசமான அனுபவம்... ஒவ்வொரு குடிசையிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து வெந்து தணிந்த முந்திரிக்கொட்டைகளை உடைத்து தோல் எடுத்து அந்த வேகத்திலேயே பேக்கிங் செய்கின்றனர். பேக்கிங் முடிந்த அடுத்த நொடி அது காத்திருப்பவர்கள் கரங்களில் சென்று அமர்கிறது. பேரம் பேசி வாங்குபவர்களும் அதிகம்தான்.
முந்திரிக்கு பெயர் போனது பண்ருட்டி என்றுதான் சொல்வார்கள். ஆனால் தானே புயல் அடித்த அடியில் பெருமளவு முந்திரி உற்பத்தியை இழந்து நிற்கிறது பண்ருட்டி என்பதுதான் உண்மை. இப்போது முந்திரியின் உற்பத்தில் இந்தியாவின் பெருமை கொடியை உயர்த்தி பிடிப்பது ஆதனக்கோட்டைதான் என்றால் அது மிகையே இல்லை.
இந்த முந்திரியிலும் 2 வகை இருக்காம். என்ன தெரியுங்களா? வெள்ளை வெளேர்னு முனை முறியாம இருக்கும் முந்திரி பால் எடுக்காத பச்சை முந்திரி. முந்திரிக் கொட்டையை ஊற வைச்சு மெஷினில் போட்டு உடைச்சு எடுத்தா அப்படியே வரும். ஆனால் இதை அதிகமாக சாப்பிட முடியாது. இது உடலுக்கும் நல்லதில்லை. அதுமட்டுமா... சீக்கிரமே பதம் கெட்டுப்போகும். இந்த முந்திரியை சமையலுக்கு பயன்படுத்தறதுக்கு முன்னாடி கண்டிப்பாக வறுத்துதான் ஆகணும்.
இன்னொன்றுதான் எரிச்ச முந்திரி... அப்படின்னா என்று கேட்கிறீர்களா? முந்திரிக்கொட்டையை நன்றாக எரித்து அதில் உள்ள பாலை எல்லாம் வெளியேற்றி விட்டு கையால் உடைச்சு மேல் தோலை எடுக்கிற முந்திரிதான் ஆதனக்கோட்டையின் ஸ்பெஷல் முந்திரி. இது உடம்புக்கும் நல்லது. சீக்கிரம் கெட்டு போகாது நிறமும் மாறாது. உணவிலும் அப்படியே சேர்த்துக்கலாம். சும்மா... மொறு...மொறுன்னு... இன்னும்... இன்னும்... திங்கணும் என்று ஆசையை தூண்டிவிடும். ஆதனக்கோட்டையின் முக்கிய தொழிலாகவே முந்திரி தொழில்தான் உள்ளது.
கிள்ளுக்கோட்டை, கீரனூர், விராலிமலை, வல்லவாரி, வேலடிப்பட்டி, சீப்புக்காரன்பட்டி, கணபதிபுரம் பல கிராமங்களில் அரசு நிலங்களிலும், தனியார் நிலங்களிலும் பல ஆயிரம் ஏக்கரில் முந்திரி விளைந்து நிற்கிறது. இந்த முந்திரி உருவில் பெரிதாக இருக்கிறது. இதனால் இதை நெற்று முந்திரி என்று அழைக்கின்றனர். முந்திரியை பொறுத்தவரை எதுவும் வீண் என்பதே இல்லை. பழம், கொட்டை, ஓடு, எண்ணைய் என்று எல்லாமே பணம்... பணம்... பணம்தான். இது உண்மையிலேயே அதிக லாபத்தை கொடுக்கும் பணப்பயிர்தான்.
முந்திரிக்கொட்டையிலிருந்து முந்திரியை எடுப்பது என்பது பெரிய சிரமமான விஷயம். முந்திரிப்பால் துளி பட்டாலும் தோல் பொசுங்கி சதை தெரிய ஆரம்பித்துவிடும். இதை நெருப்பில் போட்டு அதை சூட்டோட்டு எடுத்து சற்றே ஆறிய பிறகு... தோலை பிரிப்பது என்பது மகா... மெகா பெரிய வேலை. இப்படி எடுத்த பின்னர்தான் அருமையான முந்திரி கிடைக்கிறது. இதற்காக ஆதனக்கோட்டை மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. அதனால்தான் முந்திரியின் விலை உச்சத்தில் உள்ளது. 1 மூட்டை முந்திரிக்கொட்டை ரூ.5000க்கு வாங்கப்படுகிறது. இதை காய வைத்து எரித்து உடைத்தால், சேதாரம் ஆனது... சொத்தை என்று போனால் 22 கிலோ முந்திரி கிடைக்கிறது.
இதை ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கின்றனர். ஒரு மூட்டை முந்திரிக் கொட்டையை உடைக்க 6 ஆட்கள் தேவை. காலையில் 8 மணிக்கு சாப்பாட்டை முடித்து விட்டு உட்கார்ந்தால் மதியம் வரை வேலை ஓடுகிறது. மதிய உணவு சாப்பிடுவதில்லை. டீ மட்டுமே... காரணம் முந்திரிபால் கைகளில் ஆங்காங்கே பட்டு இருக்கும். அதில் காரமாக ஏதாவது பட்டால் உயிரே போவது போல் ஆகிவிடும். இதனால் இரவுதான் சாப்பாடு... இப்படி இந்த தொழிலாளர்கள் படாதபாடு பட்டு எடுக்கும் முந்திரியைதான் நாம் அசால்ட்டாக உணவு பொருட்களில் சேர்க்கிறோம்.
இந்த முந்திரிகளின் பின்னால் இப்படி வேதனையும், எரிச்சலும், நெருப்பின் அனலும் கலந்து நிற்கிறது. மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில்தான் முந்திரி சீசன். அப்போது முந்திரிக் கொட்டைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மழைக்காலம் வந்தால் முந்திரியின் விலை எகிறும். அப்போது வழக்கத்தை விட சற்று அதிகம் லாபம் கிடைக்கும். முந்திரி ஓட்டுக்கும் செம டிமாண்ட். முறுக்கு கம்பெனிகளில் ஆரம்பித்து ஸ்வீட் ஸ்டால்கள், உணவகங்களில் அடுப்பு எரிக்க இதை வாங்குகின்றனர்.
இப்படி அடுப்பின் அருகில் நின்று வெம்மையில் கருகிபோன கரங்கள் கொடுக்கும் வெண்மையான முந்திரிதான் இன்று கடல் கடந்தும் நம் பெருமையை பறைசாற்றி வருகிறது. இந்த ஆதனக்கோட்டை முந்திரிக்கு மலேசியா, சிங்கப்பூர் என்று வெளிநாடுகளிலும் ஆபர் அதிகம்தான். இத்தொழிலை முறைப்படுத்தி, மேம்படுத்தி கொடுக்க அரசு தயாரானால்... இப்பகுதி மக்களின் வாழ்வதாரமும் உயரும்... ஏற்றுமதியால் வருமானமும் பெருகும்.