திருச்சி:
காலை நேர பரபரப்பு... சாப்பிட என்னம்மா இருக்கு என்ற குரலுக்கு பக்கத்து வீட்டு பெண் கூறுவது இங்கு கேட்குது... டைனிங் டேபிளில் இருக்கு பாருங்க... அதற்கு கணவரின் பதில்... எது பேக் செஞ்ச சான்ட்விட்சா... ஆமாங்க... இதுதான் அந்த பெண்ணின் அடுத்த பதில்.
உணவு... உணவு... இன்று மாறுபாடான கலாச்சாரத்தால் மாறி போயிடுச்சு என்றே சொல்லலாம். காலையில் எழுந்தவுடன் உளுந்த கஞ்சியும், களி உருண்டையும் சாப்பிட்ட காலம் போய்... பேக்கிங் செய்த சான்விட்சும், பர்கரும் மென்று கொஞ்சம் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் காலமாக மாறிவிட்டது.
இன்றைய சூழ்நிலையில் வீட்டில் செய்யற உணவையே சுகாதாரமானது என்று சொல்ல முடியாத நிலை. காரணம். நாம்தான். கவர்ச்சிகரமான தோற்றமளிக்கும் அரிசி, பளபளப்பான பருப்புதான் நம் உணவில் இடம் பெற வேண்டும் என்ற நாகரீகமான கூட்டமாக நாம் மாறி விட்டோம்.
அந்த காலத்தில் பாட்டி வைக்கும் முருங்கைக்காய் சாம்பார் பத்து வீடுகள் தாண்டியும் மணக்கும். இன்று நம் வீட்டு சமையல் கட்டை கூட இந்த வாசனை தாண்டுவதில்லை. அந்தளவிற்கு ரசாயனம் சேர்க்கப்பட்டே பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன அரிசி, பருப்பு வகைகள்.
வியாபார நோக்கம், அலட்சியம் காரணமாக நாம் நம்பும் அளவு அவைகள் எந்த அளவிற்கு தரமானதாக இருக்கின்றன என்றால் பெரும் கேள்விக்குறிதான் நம் முன்னால் எழுந்து நிற்கும். சரி... பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்படுகிறதா? அதற்கும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
உடனடி உணவாக பேக்கிங் செய்யப்பட்டு நாம் எடுத்துக்கொள்ளும் பர்கர், சாண்ட்விச் ஆகியவை கூட தரமானது என்று நம்பினால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இது நம்மை அச்சுறுத்தும் விஷயம் என்பதை முதலில் உணரவேண்டும். அவ்வளவு ஏன் சுகாதாரமானது என்று நினைத்து நாம் பெரிய பெரிய அங்காடிகளில் வாங்கும் உணவுப்பொருட்கள் சீக்கிரமே நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகின்றன.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பாட்டில் மற்றும் அட்டைப்பெட்டிகளில் உள்ள குளிர்பானங்கள் என அனைத்திலும் சிறிதளவு ரசாயன கலப்பு இருக்கிறது. இதுதான் நம் உடலுக்கு தீங்கை விளைவித்து பல்வேறு நோய்களையும், பலமுறை இனம் கண்டுக்கொள்ள முடியாத நோய்களையும் ஏற்படுத்துகிறது. இப்பொழுது சுகாதாரம் என்ற பெயரில் பழங்களையும் பேக்கிங் செய்து வைக்கின்றனர். இயற்கை காற்றில் இருக்க வேண்டிய பழங்கள் இறுக்கமான பேக்கிங்கில் இருப்பதால் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன.
இவற்றால் நமக்கு எவ்வித பயன்களும் ஏற்படுவதில்லை. மாறாக தீங்குகள் தான் ஏற்படுகிறது. அவசர, அவசரமாக காலையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் பேக்கிங் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவுகளை வாங்குகிறோம். அதுமட்டுமா... அருகில் வீடுகளில் அரைத்து விற்கப்படும் மாவுகளும் விஷத்தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன.
தற்போது நம் மக்கள் மத்தியில் உணவை பற்றிய அலட்சியம் அதிகரித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். காலையில் எழுந்து இட்லி, தோசை, உப்புமா என்று இருந்த உணவுகள் மாற்றம் அடைந்து விட்டன. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்.
பேக்கிங்கை பிரித்தோமா... உடனே தின்றோமா என்று இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்... "பின்" விளைவுகளாகி விடுகின்றன. காற்று நிரம்பிய பலூனில் பின்னை வைத்து குத்தினால் டப்... என்று வெடிக்கும் அல்லவா? அதுபோல்தான் நம் உடலும் இந்த "பின்" விளைவுகளால் பாதிக்கப்படுகிறது.
சிறப்பான உணவை எடுப்போம்.. வளமாக வாழ்வோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்வோம்.