தஞ்சாவூர்:
பீட்சா, பர்கர், வெஜ் ரோல், பப்ஸ்கள் நம் பர்சை காலி செய்யும் காலம் இது. ஆனால் அன்று... நினைவுகள் ஒரு கொசுவர்த்தியை போட ஞாபகங்கள் பின்னோக்கி அலைய உதடுகள் ரோஸ் நிறத்தில் மாற... நாக்கு சப்புக்கொட்டும் அந்த பஞ்சுமிட்டாய் நினைவில் மோதியது. காரணம்... மறந்த...மறந்து கொண்டிருக்கும் தின்பண்டங்களின் வரிசையில் இனி இதுதான் பஞ்சுமிட்டாய் என்று கூகுள் சர்ச்சில் தேடி பார்க்கும் படமாக அது இடம் பெற்றாலும் ஆச்சரியமில்லை.
ஒரு கை தாத்தாவிடமும் மறுகை பாட்டியிடமும் இருக்க... நடுவில் ஊஞ்சல் போல மாலை நேரத்து வாக்கிங் சென்ற காலங்கள் இப்போது திரும்ப கிடைக்குமா? அப்பா சைக்கிளில் முன்புறம் உட்கார்ந்து நடந்து செல்பவர்களை கடக்கும் போது கம்பீரமாக பார்க்கும் பார்வை இப்போது திரும்புமா?
நடிகரும், இயக்குனருமான சேரன் பாடிய ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே போல்தான் நாமும் பாட வேண்டும். வாரச் சந்தைகள், காய்கறி சந்தை, மார்க்கெட் பகுதிக்கு உடன் சென்றால் கிடைக்கும் தேன் மிட்டாயும், திகட்டாத குச்சி ஐஸ்சும் நாவில் இருக்கும் சுவையூட்டிகளை தட்டி எழுப்புமே... இந்த வரிசையில் இடம் பிடித்திருந்த பஞ்சு மிட்டாயகள் இன்று எங்கே... எங்கே என்று தேட வைக்கிறதே! ஊருக்கு ஊர் சுற்றி சுற்றி வந்த அந்த பஞ்சுமிட்டாய் இயந்திரங்கள் இன்று ஓய்வெடுக்கிறதோ...
ஒரு புறம் அகண்ட வாய் கொண்ட இரும்பு அண்டா போன்ற வடிவில் இருக்கும் இயந்திரத்தின் நடுவில் பஞ்சு மிட்டாய் வியாபாரி ரோஸ் கலரையும், சர்க்கரையையும் கொட்ட மறு கை ஒரு விசையை சுற்ற திரிதிரியாய் பஞ்சுபோல் பறக்கும் அதை ஒரு மூங்கில் குச்சியில் சுற்றி சுற்றி தருவதற்குள் நம் நாக்குகள் எச்சில் சொட்டுவிடும். அந்த பஞ்சுமிட்டாயை வாங்க நாம் செய்த அடமும் நினைவில் இன்றும் நிற்கிறது.
இன்று ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு ஒரு கம்பில் வரிசையாக தொங்கும் பஞ்சுமிட்டாய்களை கிராமப்புறத்தில் எப்போதாவது ஒரு வியாபாரி கொண்டு வந்தால்தான் நமக்கு "ஓ" இன்றும் இது உயிருடன் இருக்கிறதா என்ற எண்ணம் வரும்.
ஒருநேரத்தில் கிராமத்திலோ... நகரத்திலோ.. கோயில் விழாவோ, திருவிழாவோ, சந்தைகளோ எது நடந்தாலும் அங்கு பஞ்சு மிட்டாய் வியாபாரி கண்டிப்பாக இருப்பார்...மற்ற நேரங்களில் பள்ளிக்கூட வாசல், கிராமத்தெருக்களின் சந்திப்புகளில் அவரை தவறாமல் பார்க்கலாம்.
ஆனால் தஞ்சையில் இன்று ஒரே ஒரு இடத்தில் இப்போதும் தவறாமல் பஞ்சு மிட்டாயை நம் கண்எதிரில் ஓட்டி பெரிய ரோஸ் நிற பந்தை குச்சியில் பிடித்து தருகிறார் ஒரு வியாபாரி. அவர் சேகர். நாற்பது வயதை கடந்த அவர் இன்றும் இந்த பஞ்சுமிட்டாய் வியாபாரத்தை விடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார். பத்து ரூபாயில் ஒரு பலூன் சைசில் பஞ்சுமிட்டாய் இயந்திரத்தை ஓட்டி பறக்கும் அந்த நூலை விட மிக லேசானதை குச்சியில் லாவகமாக பிடித்து சுற்றி சுற்றி பெரிய பந்து சைசில் மாற்றி தருகிறார். மறந்து போன இந்த தின்பண்டம் தஞ்சை சிவகங்கை பூங்காவின் வாசலில் இன்றும் இடம் பிடித்து உள்ளேன்...இன்றும் உயிருடன் உள்ளேன் என்று உரக்க குரல் கொடுக்கிறது.
இனி சேகர் கூறியதிலிருந்து... தஞ்சை நகர் பகுதி என்று எடுத்துக்கொண்டால் நான் மட்டும்தான் இந்த இயந்திரத்தை (டிரை சைக்கிள் போன்ற அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.) வைத்து பஞ்சு மிட்டாய் செய்து வருகிறேன். எனக்கு பர்மா காலனிதான். காலையில் பூங்காவிற்கு வந்தால் இருட்டும் வரைக்கும் வியாபாரம் பார்ப்பேன். ஜோடியாக வரும் ஆண், பெண்கள் வாங்குகின்றனர்.காதலர்கள் வாங்குகின்றனர். அவ்வபோது குழந்தைகள் அடம் பிடித்து வாங்குகின்றனர். கிடைக்கும் வருவாய் கம்மிதான். இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக இதுதான் என் தொழில். முன்பெல்லாம் இந்த இயந்திரத்தை ஓட்டி பஞ்சுமிட்டாய் செய்வதற்குள் விற்றுவிடும். இன்று மக்களின் ரசனை மாறிவிட்டது. வாயில் நுழையாத பெயர்களில் எல்லாம் உணவுகளும், தின்பண்டகளும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
பாரம்பரியமாக நம்மோடு கலந்த இந்த பஞ்சுமிட்டாய் தொழிலை நான் கடைசி வரை மேற்கொள்வேன். இதோடு சேர்த்து கேட்டரிங் முதல் திருமண நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன் என்று கூறினார்.
நம் நினைவுகளை சிறுவயதிற்கே திருப்பி விட்ட சேகரை பாராட்டி விட்டு அங்கிருந்து புறப்படுவதற்குள் இரண்டு பஞ்சு மிட்டாய்களை நம் வாய் பதம் பார்த்து இருந்தது. அந்த ருசி...நாக்கில் ஆரம்பித்து அடி வயிறு வரை இறங்கியது, உதடுகள் ரோஸ் நிறத்தில் லிப்ஸ்டிக் பூசியது போல் ஆக... நான் மட்டும் என்ன என்று நாக்கும் அதே நிறத்திற்கு மாறி இருந்தது. சுவையும், ஞாபகங்களும் ஒரே நேர்கோட்டில் இணைய காரணமாக இருந்த பஞ்சு மிட்டாய்... பஞ்சுமிட்டாய்தான் என்று மூளை வேகமாக பதிவை சொன்னது.